கிரேக்க சொல் "apostello" வில் இருந்து உருவான சொல் "அப்போஸ்தலர்" இதன் பொருள் அனுப்பப்பட்டவர், தூதுவன், பிரதிநிதி. அதாவது ஒருவரின் சார்பாக செய்யவேண்டிய வேலைக்கான அதிகாரம் பெற்றவர். கிறிஸ்தவ முறைமையின்படி அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினால் சுவிசேஷத்தை அறிவிக்க தெரிந்துகொள்ளப்பட்டு , அப்பணிக்கான சிறப்பு அதிகாரங்களை கிறிஸ்துவினிடத்தில் இருந்து பெற்றவர்கள் (மத்தேயு 10:1-5; மாற்கு 3:14-19; லூக்கா 6:13-16; லூக்கா 9:1-2 ). கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் அல்ல.
அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுவதற்கான (ஆதி திருச்சபை முறைமைகளின்படி) தகுதிகள்:
1) கிறிஸ்துவினால் சுவிசேஷத்தை அறிவிக்க நேரடியாக அழைக்கப்பட்டு, கிறிஸ்துவினால் போதிக்கப்பட்டு, சுவிசேஷத்தை அறிவிக்க கிறிஸ்துவினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (லூக்கா 6:13; கலாத்தியர் 1:1; யோவான் 14:25-26; யோவான் 16:13; 1 தெசலோனிக்கேயர் 2:13).
2)உயிர்தெழுந்த கிறிஸ்துவை நேரில்கண்ட சாட்சியாகவும், அவகள் உயிர்தெழுந்த ஏசுவைக் கண்டதற்கான மற்றவர்கழுடைய சாட்சியும் இருக்கவேண்டும் (யோவான் 15:27 22; அப்போஸ்தலர் 1 :21-22; 1 கொரிந்தியர் 9:1; அப்போஸ்தலர் 22 :14-15 ).
3)பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, கிறிஸ்துவின் உபதேசத்தால் போதிக்கப்பட்டு அதைப் பின்பற்றுகிறவராய் இருக்கவேண்டும் (யோவான் 14:25-26; யோவான் 16:13; 1 தெசலோனிக்கேயர் 2:13).
4)அற்புதங்களை (மனுக்குலத்துக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட, தெய்வீக பிரசன்னத்தினால் ஏற்படும் நன்மை) நடப்பிக்க தக்கதான வல்லமையையும், அதிகாரத்தையும் கிறிஸ்துவினிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டவராய் இருக்கவேண்டும் (மாற்கு 16:20; அப்போஸ்தலர் 2:43).
5)பிற அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்தையும், போதனையையும், பெற்று, அப்போஸ்தலர்களின் ஐக்கியத்திலும், அப்போஸ்தலர்களின் உடன் ஊழியத்திலும் பங்குபெற வேண்டும் (அப்போஸ்தலர் 1:26)
கிறிஸ்துவின் ஊழிய நாட்களிலே அவரால் தெரிந்துகொள்ளப்பட அப்போஸ்தலர்கள் பன்னிருவர் மட்டுமே, அதில் யூதாஸ் இஷ்கரியோத்துக்கு மாற்றாக கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான மத்தியா மற்ற சீஷர்களால் அப்போஸ்தலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறைமையே ரோமன் கத்தோலிக்க சபைகளில் அப்போஸ்தலராகிய பேதுருவுக்கு மாற்றாக (பேதுருவின் நேரடி வாரிசு) "போப்பை" தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும், இவர் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுவது இல்லை. மாற்றாக ஆன்மீக தந்தை என்றே அழைக்கப்படுகிறார்.
அப்போஸ்தலராகிய பவுல் கிறிஸ்துவின் ஊழிய நாட்களிலே தெரிந்துகொள்ளப்பட்டவரோ, கிறிஸ்துவின் சீஷரோ, சீஷர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ அல்ல. மாறாக உயிர்தெழுந்த ஏசுவினால் நேரடியாக அழைக்கப்பட்டவர். எனினும், பவுல் தனது மனமாற்றத்திற்குப் பின் 14 ஆண்டுகள் அப்போஸ்தலர்களாலும், சீஷர்களாலும் போதிக்கப்பட்டு, அப்போஸ்தலராகிய பர்னபாவுடன் தனது ஊழியத்தைத் துவக்கிப் பின்னர் அப்போஸ்தலராக தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.
கிழக்கு ஆர்தடாக்ஸ் சபைகுருக்கள் அனைவரும் அப்போஸ்தளர்களின் ( கிறிஸ்துவினால் தெரிந்து கொள்ளப்பட 12 அப்போஸ்தலர்கள்) நேரடி வாரிசுகளாக இருந்தாலும், அவர்கள் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படுவது இல்லை.
கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் இல்லை. (லூக்கா 6:13; அப்போஸ்தலர் 1:15 )