ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ!
ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, - அருரூபா,
மாகமண்டல விலாசா, நமோ நமோ!
மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, - மனுவேலா,
நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ!
காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ!
நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, - நரதேவா,
ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ!
யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ!
ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, -
இறையோனே!
அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ!
மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ!
அதிசய பராபர சீலா, நமோ நமோ, - அருளாளா,
பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ!
குறையணுவிலாத குமாரா, நமோ நமோ!
புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, - புதுவேதா,
நிறைவழியின் மேவிய கோனே, நமோ நமோ!
முறைகள் தவறாத விணோனே, நமோ நமோ!
நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, - நெறிநீதா,
இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ!
பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ!
எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, - இறையோனே
ஆசிரியர் : வேதநாயகம் சாசுதிரியார்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்