39. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி

கண்ணிகள்

1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே.

2. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே.

3. வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே.

4. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே.

5. சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே?

6. வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே?

7. சென்னியில் தைத்தமுடிச் சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே?

8. வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே?

9. வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே?

10. சங்கையின் ராஜாவே, சத்ய அனாதி தேவே,
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே?

ராகம்: சகானா
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்