91. இறைவன் நீயே எளியனுக்

பல்லவி

இறைவன் நீயே;-எளியனுக்
கிரங்குவாயே.

அனுபல்லவி

மறை விளக்கி இந்நரரை மீட்க,-இம்
மானுவேல் எனும் நாமம் மேவியே,
தரையில் வந்தவ தரித்த ஏழைகள்
தாதா, ஏசுநாதா, என். - இறை

சரணங்கள்

1. அண்டர்கள் போற்றும் விண்ணோனே-எங்கள்
ஆதரவாய் உற்ற கோனே,-நல்ல
தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத்
தூயா, அன்பர் நேயா, என். - இறை

2. நன்று திகழ் பெரியோனே-திவ்ய
ஞானம் எனும் பெயரோனே,-இயல்
அன்றும் இன்றும் ஒன்றுபோல உறும்
ஐயா, ஒளிர் மெய்யா, என். - இறை

3. எங்கும் நிறைந்த வல்லோனே,-அன்பர்க்
கின்பு செய்கின்ற நல்லோனே,-மிக
இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள்
ஈவாய்; க்ருபை ஆவாய்; என். - இறை

ராகம்: கல்யாணி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்