உனக்கு நிகரானவர் யார்?
பல்லவி
உனக்கு நிகரானவர் யார்?-இந்த
உலக முழுவதிலுமே.
அனுபல்லவி
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனார்
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த. - உனக்கு
சரணங்கள்
1. தாய் மகளுக்காகச் சாவாளோ-கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி. - உனக்கு
2. கந்தை உரிந்தெறிந்தனை-நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்து வைத்தனை, கடும்வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி. - உனக்கு
ராகம்: தோடி
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: ல. பொன்னுச்சுவாமி