149. ஐயையா நான் பாவி என்னை

என்னை ஆளும் தயாபரனே

பல்லவி

ஐயையா, நான் பாவி,-என்னை
ஆளும் தயாபரனே!

சரணங்கள்

1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன்;-ஏ
சையா, அபயம்! அபயம்! இரங்கும், மே
சையா, என் தாதாவே. - ஐயையா

2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்;
    எத்தனை தீதுகளோ?-என-து
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
    தாண்டருளும், கோவே. - ஐயையா

3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
    மாலமோ, ரண்டகமோ?-மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
    சமஸ்த நன்மைக் கடலே. - ஐயையா

4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
    பொறாமையும், ஆணவமும்-விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
    ஏகதிரித்துவனே. - ஐயையா

5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
    துனதடியார்களையும்,-நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
    ஏவும் பராபரனே - ஐயையா


ராகம்: முகாரி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்