கிருபைகூரும் ஐயனே
பல்லவி
கிருபை கூரும் ஐயனே;-பாவி என்
சிறுமை தீரும், மெய்யனே.
அனுபல்லவி
பொறுமையே மிகுந்த அருமை தேவனே, நீர். - கிருபை
சரணங்கள்
1. ஆறு லட்சண தேவா,-அடியார்க்குத்
தேறுதல் அருள்தா, வா;-திருமறை
கூறும் கருணை நாவா,-குறை அறப்
பேறு பெறச் செய் ஜீவா,-பெரியவா,
ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே, நீர் - கிருபை
2. பத்தர் தொழும் சருவேசா,-பரிந்தருள்
வைத்த சத்திய வாசா,-மகா பரி
சுத்தக் கிருபையின் நேசா,-சுயாதிப
முத்தொழில் தரும் ஈசா, முழுதும் என்
மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே, நீர் - கிருபை
3. பாவத்தின் வழி நடந்தேன்,-பசாசுடன்
சாபத்திலே கிடந்தேன்,-சதா நித்ய
கோபத்தையே அடைந்தேன்,-கொடுமையின்
ஆபத்தால் மனம் உடைந்தேன்,-அடிமையை
மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த் திரங்கி. - கிருபை
4. சரணம், சரணம், நாதா!-தவிக்கிற
தருணம், தருணம், வேதா!-தயாபர
கிரணம் இலங்கும் பாதா!-கிலேசங்கள்
திரணம்[1] உறாத நீதா!-திடுக்கிடும்
மரண வேளையிலும் கரணம்[2] மயங்கும் போதும். - கிருபை
ராகம்: மோகனம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] அற்பம்
[2] புத்தி