166. நிர்ப்பந்தமான பாவியான

1. நிர்ப்பந்தமான பாவியான
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கலான
பயமாய் வந்தேன், கர்த்தரே,
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ,என் கொடிய பாவத்தாலே
மகா திகில் பிடித்தது;
ஆ, ஸ்வாமி, துயரத்தினாலே
நிறைந்த ஏழைப் பிள்ளைக்கு
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. பிதா இதயமே, மன்னியும்;
என் நோவுக்குந் தவிப்புக்கும்
இரங்கி, ஆறுதல் அளியும்;
ஆ, கோபமா யிராதேயும்.
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் அழுகைக்கு நீர்மறைந்து
போவீரோ, என்னைக்கேளீரோ,
நான் தேவரீரை விட்டலைந்து
இனி அழிய வேண்டுமோ,
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

5. என் புண் நீர் ஆற்றினாலொழிய
ஆறாக் கேடாயிருக்குமே
ஆனாலும் கிருபை புரிய
விண்ணப்பம் பண்ணும் ஏழைக்கே
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

6. என் குற்றத்துக்குத்தக்கதாகச்
செய்யாமல், தயவாயிரும்;
பிதாவே என்னைப்பிள்ளையாகத்
திரும்ப நோக்கியருளும்.
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

7. “இனி நீ பாவஞ் செய்யாயாக,
மன்னித்தோம்” என்றோர் சொல்லையே
அடியேனுக்குச் சொல்வீராக,
அப்போபிழைப்பேன், கர்த்தரே
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

8. என் நெஞ்சிலே திகில் தணியும்,
நீர் என்னைக் கேட்டருளுவீர்;
ஆ, ஸ்வாமி,ஆறுதல் அளியும்,
பிதாவே, என்னைக் கைவிடீர்;
இரங்குமேன், இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Christoph Tie tze, † 1703.