1. மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
2. நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
3. அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.
4. கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
5. கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
6. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
9. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
10. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
11. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.
13. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
14. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
17. கொலை செய்யாதிருப்பாயாக.
18. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக
19. களவு செய்யாதிருப்பாயாக
20. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
22. இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
23. மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:
24. இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
25. இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.
26. நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?
27. நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
28. நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.
29. அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
30. நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
31. நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
32. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.
33. நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.