1. பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2. உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
3. உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.
4. மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
5. அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
6. நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,
7. சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,
8. அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.
9. பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
10. ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
11. மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
12. நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
13. சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
14. அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
15. கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
16. தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
17. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
18. குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
19. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
20. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
21. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
22. தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
23. தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
24. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
25. குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
26. இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.