1 சாமுவேல் 21

1. தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.

2. தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.

3. இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என்கையிலே கொடும் என்றான்.

4. ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.

5. தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.

6. அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

7. சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.

8. தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.

9. அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.

10. அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.

11. ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்.

12. இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,

13. அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.

14. அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?

15. எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.