1 சாமுவேல் 29

1. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.

2. அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.

3. அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

4. அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?

5. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

6. அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.

7. ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.

8. தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

9. ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக் கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.

10. இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிகொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

11. அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.