1. தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:
2. கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
3. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.
4. அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
5. என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?
6. பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.
7. அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.
8. தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
9. இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
10. இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.
11. இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,
12. இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
13. முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,
14. தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.
15. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
16. அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
17. கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
18. யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.
19. இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.
20. பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
21. அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
22. இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
23. முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
24. யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
25. ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
26. பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
27. ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
28. அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
29. பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
30. பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,
31. அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,
32. சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.
33. ஆசாரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,
34. மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.
35. கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,
36. சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,
37. அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,
38. இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,
39. ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.