1 இராஜாக்கள் 4

1. ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான்.

2. அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான்.

3. சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.

4. யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.

5. நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.

6. அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனிராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.

7. ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.

8. அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.

9. தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.

10. ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.

11. அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.

12. அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.

13. கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.

14. இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.

15. அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.

16. ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.

17. பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.

18. ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.

19. ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.

20. யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

21. நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

22. நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,

23. கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.

24. நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.

25. சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

26. சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.

27. மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன் தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,

28. குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.

29. தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

30. சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

31. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின்குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

32. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.

33. லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.

34. சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.