1 இராஜாக்கள் 11

1. ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

3. அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.

4. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

5. சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.

6. சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

7. அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.

8. இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

9. ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

10. அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

11. ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

12. ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

13. ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

14. கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.

15. தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான்.

16. அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது,

17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.

18. அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.

19. ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயைகிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.

20. தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்.

21. தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.

22. அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

23. எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,

24. தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்று போடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.

25. ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசொன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.

26. சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.

27. அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

28. யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

29. அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

30. அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

31. யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

33. அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்.

34. ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

35. ஆனாலும் ராஜ்பாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

36. என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

37. நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

38. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

39. இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.

40. அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.

41. சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

42. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.

43. சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.