1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
2. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3. நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
5. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
6. இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
8. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
9. வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
10. துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
11. நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.