சங்கீதம் 53

1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

3. அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

4. அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

5. உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

6. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.