சங்கீதம் 135

1. அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

2. கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

3. கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.

4. கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

5. கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

6. வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.

7. அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

8. அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

9. எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

10. அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;

11. எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,

12. அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

13. கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

14. கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

15. அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

16. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

17. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

18. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

19. இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

20. லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

21. எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.