நீதிமொழிகள் 10

1. சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

2. அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

3. கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

4. சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5. கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

6. நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

7. நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

8. இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

9. உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

10. கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

11. நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

12. பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

13. புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

14. ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

15. ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.

16. நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

17. புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

18. பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

19. சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

20. நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

21. நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

22. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

23. தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

24. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

25. சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

26. பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

27. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

28. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

29. கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

30. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

31. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

32. நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.