1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
2. உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
3. கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
4. உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
5. மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
6. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
7. திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.
8. தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.
9. பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
10. உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.
11. என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
12. விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
13. அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
14. ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
15. அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
16. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
17. இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.
18. அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
19. தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
20. பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
21. வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
22. மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
23. உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.
24. செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
25. புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
26. ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
27. வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.