1. உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
2. தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
3. நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
4. என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
5. உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
6. உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும் ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
7. உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.
8. ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
9. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
10. சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?
11. பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.
12. நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
13. திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.