ஏசாயா 55

1. ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.

2. நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

3. உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

4. இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.

5. இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைபடுத்தியிருக்கிறார்.

6. கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

7. துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

10. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

12. நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

13. முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.