1. பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்: நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார்.
2. அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.
3. அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,
4. கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
5. பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
6. முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.
7. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.
8. அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.
9. அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
10. ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.
11. இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைகூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.