1. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ!
2. நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.
3. தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,
4. தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,
5. தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,
6. பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.
7. ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும்.
8. நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
9. ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.
10. அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
11. இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார்.
12. கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.
13. நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்.
14. இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழிதொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.