1 கொரிந்தியர் 15

1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்

2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.

8. எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.

9. நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

10. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

11. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.

12. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

13. மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.

14. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

15. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.

16. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.

17. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.

18. கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.

19. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

20. கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

21. மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.

22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

24. அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

25. எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

26. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

29. மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

30. நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?

31. நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.

32. நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர்வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?

33. மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

34. நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

35. ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,

36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

37. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

38. அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

39. எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

41. சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

46. ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

47. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

48. மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

49. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.

50. சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

56. மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.

57. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

58. ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.