1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.
3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற் போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அயல் வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத் தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத் தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.
6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
11. அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
12. அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
14. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
15. புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.
16. முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
17. புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
18. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
19. ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான்.
20. புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
22. ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.
23. கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
24. இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25. கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26. அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
27. இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
28. இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
29. நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
30. அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
31. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.
32. நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
33. எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
34. பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
35. மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
36. கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
38. அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
39. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
40. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
41. நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
42. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
43. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
44. பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
45. அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
46. அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக் கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது.
47. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
48. அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
49. சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
50. இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
51. அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.