கிரேக்க சொல் "apostello" வில் இருந்து உருவான சொல் "அப்போஸ்தலர்" இதன் பொருள் அனுப்பப்பட்டவர், தூதுவன், பிரதிநிதி. அதாவது ஒருவரின் சார்பாக செய்யவேண்டிய வேலைக்கான அதிகாரம் பெற்றவர். கிறிஸ்தவ முறைமையின்படி அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினால் சுவிசேஷத்தை அறிவிக்க தெரிந்துகொள்ளப்பட்டு , அப்பணிக்கான சிறப்பு அதிகாரங்களை கிறிஸ்துவினிடத்தில் இருந்து பெற்றவர்கள் (மத்தேயு 10:1-5; மாற்கு 3:14-19; லூக்கா 6:13-16; லூக்கா 9:1-2 ). கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் அல்ல.
அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுவதற்கான (ஆதி திருச்சபை முறைமைகளின்படி) தகுதிகள்:
1) கிறிஸ்துவினால் சுவிசேஷத்தை அறிவிக்க நேரடியாக அழைக்கப்பட்டு, கிறிஸ்துவினால் போதிக்கப்பட்டு, சுவிசேஷத்தை அறிவிக்க கிறிஸ்துவினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (லூக்கா 6:13; கலாத்தியர் 1:1; யோவான் 14:25-26; யோவான் 16:13; 1 தெசலோனிக்கேயர் 2:13).
2)உயிர்தெழுந்த கிறிஸ்துவை நேரில்கண்ட சாட்சியாகவும், அவகள் உயிர்தெழுந்த ஏசுவைக் கண்டதற்கான மற்றவர்கழுடைய சாட்சியும் இருக்கவேண்டும் (யோவான் 15:27 22; அப்போஸ்தலர் 1 :21-22; 1 கொரிந்தியர் 9:1; அப்போஸ்தலர் 22 :14-15 ).
3)பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, கிறிஸ்துவின் உபதேசத்தால் போதிக்கப்பட்டு அதைப் பின்பற்றுகிறவராய் இருக்கவேண்டும் (யோவான் 14:25-26; யோவான் 16:13; 1 தெசலோனிக்கேயர் 2:13).
4)அற்புதங்களை (மனுக்குலத்துக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட, தெய்வீக பிரசன்னத்தினால் ஏற்படும் நன்மை) நடப்பிக்க தக்கதான வல்லமையையும், அதிகாரத்தையும் கிறிஸ்துவினிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டவராய் இருக்கவேண்டும் (மாற்கு 16:20; அப்போஸ்தலர் 2:43).
5)பிற அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்தையும், போதனையையும், பெற்று, அப்போஸ்தலர்களின் ஐக்கியத்திலும், அப்போஸ்தலர்களின் உடன் ஊழியத்திலும் பங்குபெற வேண்டும் (அப்போஸ்தலர் 1:26)
கிறிஸ்துவின் ஊழிய நாட்களிலே அவரால் தெரிந்துகொள்ளப்பட அப்போஸ்தலர்கள் பன்னிருவர் மட்டுமே, அதில் யூதாஸ் இஷ்கரியோத்துக்கு மாற்றாக கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான மத்தியா மற்ற சீஷர்களால் அப்போஸ்தலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறைமையே ரோமன் கத்தோலிக்க சபைகளில் அப்போஸ்தலராகிய பேதுருவுக்கு மாற்றாக (பேதுருவின் நேரடி வாரிசு) "போப்பை" தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும், இவர் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுவது இல்லை. மாற்றாக ஆன்மீக தந்தை என்றே அழைக்கப்படுகிறார்.
அப்போஸ்தலராகிய பவுல் கிறிஸ்துவின் ஊழிய நாட்களிலே தெரிந்துகொள்ளப்பட்டவரோ, கிறிஸ்துவின் சீஷரோ, சீஷர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ அல்ல. மாறாக உயிர்தெழுந்த ஏசுவினால் நேரடியாக அழைக்கப்பட்டவர். எனினும், பவுல் தனது மனமாற்றத்திற்குப் பின் 14 ஆண்டுகள் அப்போஸ்தலர்களாலும், சீஷர்களாலும் போதிக்கப்பட்டு, அப்போஸ்தலராகிய பர்னபாவுடன் தனது ஊழியத்தைத் துவக்கிப் பின்னர் அப்போஸ்தலராக தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.
கிழக்கு ஆர்தடாக்ஸ் சபைகுருக்கள் அனைவரும் அப்போஸ்தளர்களின் ( கிறிஸ்துவினால் தெரிந்து கொள்ளப்பட 12 அப்போஸ்தலர்கள்) நேரடி வாரிசுகளாக இருந்தாலும், அவர்கள் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படுவது இல்லை.
கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் இல்லை. (லூக்கா 6:13; அப்போஸ்தலர் 1:15 )
ஆன்மீகம்
ஆதித் திருச்சபையின் பண்டிகைகளில் மிகமுக்கியமான பண்டிகை கிறிஸ்து உயிர்தெழுந்த (ஈஸ்டர்) பண்டிகை. இந்த உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு கிறிஸ்தவர்கள் ஆயத்தப்படும் காலமே தபசு காலம் அல்லது லெந்து காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தபசு கால ஆசரிப்பு, கிறிஸ்து உயிர்தெழுந்த (ஈஸ்டர்) பண்டிகையைக் குறித்து மட்டுமின்றி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும் காலமாகவும் ஆசரிக்கப்படுகிறது. மேலும் இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தைத் துவங்குவதற்கு முன்பு, வனாந்திரத்தில் 40 நாள் உபவாசம் இருந்ததை நினைவு கூறவும் இந்த ஆசாரிப்பு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆசாரிப்பு கிறிஸ்து உயிர்தெழுந்த (ஈஸ்டர்) பண்டிகைக்கு ஆறரை வாரங்களுக்கு முன் சாம்பல் புதன்கிழமையில் துவங்குகிறது. ஞாயிற்றுக்கிழமைகள் தபசு நாட்களில் கணக்கிடப்படுவதில்லை. கிழக்கத்திய நாடுகளின் திருச்சபைகளில்(ஈஸ்டன் ஆர்தடாக்ஸ்) தபசு காலம் கிறிஸ்து உயிர்தெழுந்த (ஈஸ்டர்) பண்டிகைக்கு முந்தைய ஏழாவது வாரத்தின் திங்கட்கிழமையில் துவங்கி ஈஸ்டருக்கு ஒன்பது நாட்களுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் முடிவடைகிறது. இந்த 40 நாள் “கிரேட் லென்ட்” என்று அழைக்கப்படுகிறது। இந்த காலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கிடப்படுவதில்லை.
அப்போஸ்தலர்கள் காலங்களிலிருந்து கிறிஸ்து உயிர்தெழுந்த (ஈஸ்டர்) பண்டிகைக்கு முன்னர் தபசு காலம் அல்லது தகவ காலம் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் கி.பி. 325 ஆம் ஆண்டு நைசியாவின் முதல் திருச்சபை மாநாட்டிர்க்கு பின்னரே இந்த ஆசரிப்பை திருச்சபையின் அதிகாரபூர்வ ஆசரிப்பாக கடைப்பிடிக்கப் பட்டுவந்துள்ளது.
தபசு காலத்தை புதிய விசுவாசிகளின் ஞானஸ்நானத்திற்காக (திருமுழுக்கு) ஆயத்தப்படும் காலமாகவும், குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் மற்றும் திருச்சபையில் இருந்து விலக்கிவைக்கப் பட்டவர்கள் மீண்டும் திருச்சபையில் இணைந்து திருவிருந்தில் பங்கேற்க ஆயத்தப்படும் காலமாகவும் அனுசரிக்கப்பட்டது.
திருச்சபையில் மீண்டும் இணைபவர்கள் இந்த காலங்களில் ரெட்டுத்தி சாம்பலை பூசிக்கொள்வது வழக்கமாக இருந்துவந்த நடைமுறை 9 ஆம் நூற்றாண்டில் திருச்சபையால் கைவிடப்பட்டது.
தபசு காலகத்தின் முதல் நாள் அன்று விசுவாசிகளின் அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் பூசிக்கொள்வதால் இந்த நாள் சாம்பல் புதன்கிழமை என்று அழைக்கப்படுகிறது. (இந்த சாம்பல் முந்தைய ஆண்டின் குறுத்தோலை ஞாயிறன்று பயன்படுத்தப்பட்ட குறுத்தோலைகளின் சாம்பல் என்பது குறிப்பிடத்தக்கது.)
முதல் நூற்றாண்டில் தபசு கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. குறிப்பாக மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் கிழக்கத்திய நாடுகளின் திருச்சபைகளில் (ஈஸ்டன் ஆர்தடாக்ஸ் திருச்சபை) இந்த ஆசாரிப்பு தீவரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்பது, இறைச்சி, மீன், முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை தவிர்ப்பது, மது, எண்ணெய் மற்றும் பால் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது போன்ற பழக்கங்கள் இன்றும் பின்பற்றப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள திருச்சபைகளில் இந்த ஆசாரிப்பு படிப்படியாக குறைந்துபோனது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் இந்த ஆசாரிப்பை இரண்டாம் உலகப் போரின்போது கைவிட்டது. சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி மட்டுமே இப்போது தபசு கால ஆசரிப்பு நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. திருச்சபைகள் இந்த ஆசாரிப்பை கைவிட்டாலும், பாரம்பரியம் அறிந்த லுத்தரன், அங்கலிக்கன், மற்றும் கத்தோலிக்க விசுவாசிகள் வெள்ளிக்கிழமைகளில் உபவாசம், இறைச்சி இல்லாத உணவு, மது அருந்தாமை, திருமணம் மற்றும் விழாக்கல் நடத்தாமல் எளிமையாக தபசு காலம் ஆசரிக்கின்றனர்.
வணிகமயமாக்கப்பட்ட திருச்சபைகளும், பொழுதுபோக்கு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நிரம்பிய தேவ ஆராதனைகளும் அதிகரிது வரும் இந்த புது யுகத்தில் நாம் பழமைக்கு அல்ல உண்மைக்கு திரும்ப வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
தேவனுடய இரக்கத்தாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலாலும், கிறிஸ்துவின் அன்பையும்
அவருடைய கிருபையையும் சுதந்தரித்துக் கொள்வோம், வாருங்கள்!