3. அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா

பல்லவி

அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடை

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! - அடை

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடை

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? - அடை

ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: தேவசகாயம் உபாத்தியாயர்