1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.
2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து-எனதாகும்;
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் 'நான்' மறைந்து-பறந்தோடி.
3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து,
வளமை வரவே விளைந்து-நிலையாக.
4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த-பெருமானே!
ராகம்: கேதாரகௌளம்
தாளம்: கண்டசாபு தாளம்
ஆசிரியர்: நாராயண வாம திலகர் சந்தியாகு