30. ஆண்டவர் பங்காகவே தசம பாகம்

பல்லவி

ஆண்டவர் பங்காகவே, தசம பாகம்,
அன்பர்களே, தாரும்;-அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்.

அனுபல்லவி

வான்பல கணிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன், பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால். - ஆண்டவர்

சரணங்கள்

1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே-அந்த
மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட
விதித்தது தானே,
வேதனம் வியாபாரம், காலி, பறவையில்,
வேளாண்மை, கைத்தொழில், வேறு வழிகளில்,
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே. - ஆண்டவர்

2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய,
அதற்குளதைப் பேண,-தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண,
ஏழைகள், கைம்பெண்கள், அனாதைப் பாலகர்கள்,
ஏதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட - ஆண்டவர்

3. நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து,-நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வா றன்புகூர்ந்து,
நன்மை புரிந்த பிதாவைக் கனம்பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மததே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார்; மாவிந்தை யல்லவோ? - ஆண்டவர்

ராகம்: பியாகு
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: ஜி.சே. வேதநாயகம்