31. ஆண்டவரின் நாமமதை ஈண்டு

கண்ணிகள்

1. ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன்;-அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன். - ஆண்

2. உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன்;-மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன். - ஆண்

3. கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை-மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை. - ஆண்

4. வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன்;-பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன். - ஆண்

5. மற்றவனை ஏசி வாயால் குற்றங்கள் செய்யும்-துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும். - ஆண்

6. பொய்யர்களை என்னுடனே உய்ய ஒட்டேனே;-மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே. - ஆண்

7. சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே;-நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே. - ஆண்

ராகம்: சஹானா
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: த. யோசேப்பு