பல்லவி
ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புதப் பாலகனார்?
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே - இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ்
சிருட்டித்த மாவலரோ? - ஆர்
2. மேசியா இவர்தானோ? - நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? - ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ? - நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசய
மேவிய விண்ணொளியோ? - ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ? - நம்மைப்
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? - ஆர்
5. ஜீவனின் அப்பமோதான்? - தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? - ஆர்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே . மாசிலாமணி