பல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்?
அனுபல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. - ஆரி
சரணங்கள்
1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். - ஆரி
2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. - ஆரி
3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. - ஆரி
4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. - ஆரி
ராகம்: சாவேரி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்