93. இன்னமும் நாம் யேசு பாதத்தில்

பல்லவி

இன்னமும் நாம் யேசு பாதத்தில்-சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே.

அனுபல்லவி

தன்னுடைய காவலுன்மேல்-தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
தன்னிருகரத்தால் உன்னைத்-தாங்கியே காத்துக்கொண்டு. - இன்ன

சரணங்கள்

1. தன்னிரு சிறகுகளின் கீழ்-உன்னை மறைத்துத்
தாங்கித் தயவோடு காப்பாரே!
இன்னமும் திருமன்னாவை-என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி-எல்லாத் தீங்குக்குந் தற்காத்து. - இன்ன

2. ஜீவியத்தின் பாரம் உன்னையே-வதைத்திடாமல்
சீருடனே கர்த்தர் காப்பாரே!
பாவ சோதனைகள் உன்மேல்-படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே-பட்சமோடே பாதுகாத்து. - இன்ன

3. ஆண்டவரின் அன்பின் கொடிதான்-உன்மேல் பறந்து
ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை-நேசித்துப் பரிபாலித்து. - இன்ன

ராகம்: ஆனந்த பைரவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ச.ஜெ. சிங்