94. இன்னிய முகமலர்ந்து இருதயத்

தேவாரம்

1. இன்னிய முகமலர்ந்து இருதயத் துருகுமன்பால்
உன்னத தேவ மைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து,
மன்னிப்பீர் என்பிதாவே! மதலைகளிவர்கள் குற்றம்
மன்னிப்பீர்' என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர்.

2. பதிலுக்குப் பதில் செயென்ற பழைய ப்ரமாண மாற்றிப்
புதியதங் கற்பனையைப் புவியதில் நாட்ட வந்த
கதி தருங் கருணை மூர்த்தி கருணையுற் றுருகித் தம்மை
வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார்.

3. விற்றதும் வீணன் நானே, வெறுத்ததும் வீணன் நானே,
செற்றதும் சேவகன் நானே, அறைந்ததும் அடிமை நானே,
குத்தின கோரன் நானே, கொலைபுரிந்த வனும் நானே,
இத்தனை பாவஞ்செய்தேன்; இரங்கியாட் கொள்ளுமையா.

4. மன்னிப்பீர் எந்தன் பாவம், மைந்தர்தம் சிலுவைநோக்கி;
மன்னிப்பீர் எந்தன் பாவம், மைந்தர் ஐங் காயநோக்கி,
மன்னிப்பீர் எந்தன் பாவம், மரிக்கும் தம்மைந்தர் நோக்கி,
மன்னிப்பீர் எந்தன் பாவம், மன்னிப்பீர்; ஆமென் ஆமென்.

ராகம்: நவரோஜ்
தாளம்: ஏக தாளம்
ஆசிரியர்: ஆ.ஐ. பிச்சைமுத்து