என்னால் உரைக்க முடியாதே
பல்லவி
என்னாலுரைக்க முடியாதே-என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே.
அனுபல்லவி
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை - என்னால்
சரணங்கள்
1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே;
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி
வியந்து விரைந்து பாடுவேனே.
நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென
வெற்றி அடைந்தேனே - என்னால்
2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப்
பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே,
ஆவல் ஆசையும் அகற்றினாரே,-தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே;
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க,
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும்
பாடுதே நாவதும். - என்னால்
3. சத்துருவினால் விளைந்த கேட்டை-எல்லாம்
தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை.
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப்-பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை;
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேன் இனி. - என்னால்
4. ஆசைமிகும் யேசு பெருமானே!-பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே!
வாச[1] லீலிப்பூவே சீவதேனே!-வான
மன்னாவே இலங்கு கதிரோனே!
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும்
நேசத்தால் மகிழ்ந்றென்தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம் - என்னால்
[1] நல்மணமுள்ள
ராகம்: காபி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ம. வேதமாணிக்கம்