என்ன பாக்கியம்
பல்லவி
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
அனுபல்லவி
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; - என்ன
சரணங்கள்
1. வானகந் தானோ,-அல்லதிது-வையகந் தானோ?
ஆனகம்[1] சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது; - என்ன
2. போதும் இவ்வாழ்வு;-பரகதி-போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது; - என்ன
3. சாமியைக் கண்டேன்,-மகானந்தம் சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி[2] வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்; - என்ன
4. அன்னமும் நீயே;-கிடைத்தற்கருஞ்-சொன்னமும்[3] நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன
[1]. தொழுவம்
[2]. இனிய கனி
[3]. தங்கம்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: காபிரியேல் உபதேசியார்