159. ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய

ஓய்வுநாளை ஸ்தாபித்த உன்னதா

பல்லவி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
உன்னதா, உமக்கே ஸ்தோத்திரம்!

அனுபல்லவி

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி, உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு[1] - ஓய்வு

சரணங்கள்

1. தேகக் கவலை, தொழில், யாவையும் ஒழிக்கத்,
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க,
ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல்[2] அறத் தழைக்க,
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க. - ஓய்வு

2. விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட,
வேதா, உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட,
மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட,
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட, - ஓய்வு

3. முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி,
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி,
எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி. - ஓய்வு

 

ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்


[1] மலர்ந்து
[2] பகை