168. கல்லும் அல்லவே காயம் வல்லும்

கல்லும் அல்லவே காயம்
                                           
பல்லவி

கல்லும் அல்லவே, காயம்-வல்லும்[1] அல்லவே-இது

அனுபல்லவி

வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. -  கல்

சரணங்கள்

1. வல்லமை பேசாதே, நாளை  வருவதறியாய்,-அதால்
நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. - கல்

2. சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன்
பார்[2] அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? - கல்

3. காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே
போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. - கல்

4. வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே,-மாய
தேக நரர் நாட்களும் சீக் கிரம் கழியுமே. - கல்

5. இராப் பகல், இருள், வெளிச்சம் மாறும் வண்ணமே,-ஐயோ!
நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே. - கல்

6. பூவதும் உதிரும், பசும் புல்லும் வதங்கும்.-அது
போலவே நரர் உருவம் மாறி வதங்கும். - கல்

7. மேலது கீழ், கீழதுமேல் ஆம் உருளைபோல்,-நரர்
மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே. - கல்

8. நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும்,-ஐயோ!
அன்னவன் மலையும்[3] நேரம் யாவும் கலையும். - கல்

9. ஆசனம், துரைத்தனம், தத்துவங்கள் ஒழியும்,-அர
சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண்டொழிவாரே. - கல்

10. யாவும் ஓட்டமாகப் பாயும், யாவும் அழியும்,-மெய்த்
தேவபக்தி யே கெலிக்கும்;[4] ஜீவன் நிலைக்கும். - கல்


ராகம்: காபி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] வலிமை
[2] உலகம்
[3] மறையும்
[4] வெல்லும்