கல்வாரி மலையோரம் வாரும்
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும்,
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே
சரணங்கள்
1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு,
நொம்பலப்[1] படவைக்க ஐயன்மேல் உருண்டு,
தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு,
சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு,
சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா[2] - ஜோதி - கல்
2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ?
உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ?
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ?
மேனியெல்லாம் வீங்கி விதனி[3]க்கலாச்சோ?
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே - ஜோதி - கல்
3. மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவதுமேனோ?
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ?
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ?
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது[4] மேனோ?
சண்டாளர்கள் நம்மால்தானே, நம்மால்தானே - ஜோதி - கல்
4. ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை,
நாமக்கிறிஸ்தவர்க்கு இருபங்கு தொல்லை,
பட்ச பாதம் ஒன்றும் பரதீசில் இல்லை,
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை,
பந்தயத்திலே முந்தப் பாரும், முந்தப் பாரும் - ஜோதி - கல்
ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: ரத்ன பரதேசியார்
[1] துன்பம்
[2] தந்தை
[3] துயருடைய
[4] துவண்டது