179. கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்

கிறிஸ்தவ இல்லறமே

பல்லவி

கிறிஸ்தவ இல்லறமே-சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல. - கிறிஸ்தவ

சரணங்கள்

1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும். - கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம் போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக். - கிறிஸ்தவ

3. அன்போடாத்துமதாகம் அரிய பரோபகாரம்
அருமையாக நிறைந்த அயலார்க் கொளி விளக்காய்த்
துன்பஞ் செய்கிற பல தொத்து வியாதிகளைத்
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து - கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலை உடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் - கிறிஸ்தவ


ராகம்: காம்போதி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: ல. பொன்னுசுவாமி