181. குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி

பல்லவி

குணப்படு, பாவி; தேவ
கோபம் வரும் மேவி-இப்போ.

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்;
காலமிருக்கையில் சீலமதாக நீ. - குணப்படு

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய்,-அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய்,-பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார். - குணப்படு

2. துக்கமடையாயோ?-பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ?-மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? - குணப்படு

3. தாவீ தரசனைப்போல்,-தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்,
பாவி மனுஷியைப்போல்,-மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி. - குணப்படு

4. உன்னை நீ நம்பாதே!-இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே;-எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார், அனைவரைப்பற்று - குணப்படு


ராகம்: உசேனி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்