188. சத்திய வேதத்தைத் தினம் தியானி

சத்திய வேதத்தைத் தினம் தியானி

பல்லவி

சத்திய வேதத்தைத் தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.[1]

அனுபல்லவி

உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் - சத்திய

சரணங்கள்

1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். - சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். - சத்திய

3. புலைமேவிய[2] மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம்[3] அதாம் - சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. - சத்திய

5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;
வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. - சத்திய


ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: மு. சாமுவேல்


[1] அது பெருமைக்குரியது
[2] தீமை சேர்ந்த
[3] மருந்து