சடுதி வாருமேன்
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், வாமி, வாருமேன்,-இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன். - சாலேமின்
2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே;-இந்தச்
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? - சாலேமின்
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே;-நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே -சாலேமின்
4. நங்கை[1] எருசலேம்பட்டணம் உம்மை நாடித்தேடுதே;-இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே. - சாலேமின்
5.சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே;-உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே. - சாலேமின்
ராகம்: மோகனம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: அருளானந்தம்
[1] பெருமாட்டி