என்பேரில் தயவாய் இரும்
பல்லவி
சருவேசுரா, ஏழைப்பாவி-என் பேரிலே
தயவாய் இரும், சுவாமி
அனுபல்லவி
திரியேக பரதேவா, நெறி மேவும் ஒரு யோவா,
சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து. - சரு
சரணங்கள்
1. தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை[1]
உலகை நேசித்தாய்;-நின்
சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய்;
இந்தப் பெரிய நேசம் புந்திக்[2] கொளியதாக்கும்;
எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்! - சரு
2. தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல்
பொறுத்தீர், - நீர்
யாவும் அறிந்திருந்தும், கோபித்துக் கைவிடாதென் நன்றி
கேட்டை மறுத்தீர்,
ஜீவனே, உமக்குப் பாவி பதில் என்செய்வேன்?
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்? - சரு
3. நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக்
கடந்தேன்;-கெட்ட
வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப், பேயின் மனதுக்கேற்க
நடந்தேன்,
பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்,
தஞ்சம் என்றேன்; உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும். - சரு
ராகம்: மோகனம்
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] இவ்விதமாய்
[2] புத்தி