சுத்தபரன் சுத்த ஆவியே
பல்லவி
சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை
சொல்லவரம் எனக்கீவையே.
அனுபல்லவி
மெத்தவும் அசுத்தன் நானே
மேவினேன் நின் பாதந்தானே,
உத்தமனம் கெஞ்சுவேனே,
உன்னையல்லா லழிவேனே. - சுத்த
சரணங்கள்
1. அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர்
அருளைப் பெறவும் போகுமோ?
மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி
விசுவாசங் கொள்ளலாகுமோ?
கடினம் என் மனங்கல்லு,
கத்தா ஓர் வார்த்தை சொல்லு,
திடசீவன் வரக்கொல்லு,
சேவடி நீ சேர்த்துக்கொள்ளு - சுத்த
2. சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும்
சுகிர்தந்தனை யானறிந்தேன்,
உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக்
கொளிதருவதை யுணர்ந்தேன்.
அவமாகா மெய்விஸ்வாசம்,
அதனால் தூய்மை நன்னேசம்,
கவர்ந்துனைத் தொழும்பாசம்,
கனிந்தளித்தாய் நல்வாசம். - சுத்த
3. பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப்
பொற்புற[1] விணைத்துச் சேர்த்துச்
சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு
தற்பரனில் நித்தங்காத்து
க்ஷேமகரஞ்செய்யும் நேயா,
தின்மையைப் பகைக்குந் தூயா,
பாமரர்க்கு நற்சகாயா,
பார்த்திபா என்றென்றும் மாயா. - சுத்த
4. நித்தமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில்
நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச்
செத்த விசுவாசிகளையும் என்னையும் உடல்
ஜீவனோடெழுப்புவாய் இன்பாய்.
நித்திய ஜீவன் தருவாய்,
நின்மலன் யேசுவை மெய்யாய்ப்
பத்தியாகவே மனம்வாய்
பற்றினோர்க்கு மா தயவாய். - சுத்த
ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்
[1] மாட்சியுள்ள ஐக்யம்