சுத்திகரியாயோ
பல்லவி
சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்
சுத்திகரியாயோ,
சரணங்கள்
1. மத்தியஸ்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே,
பக்தி தரும் போதனே, உயர் முக்திதரும் நீதனே! - சுத்
2. பெந்தெகொஸ்து முருகிலே,[1] அங்கு வந்தே சீஷரருகிலே,
உந்திய[2] கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே! - சுத்
3. அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே,
சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல்நேசனே! - சுத்
4. சத்திய நெறியில் ஏறவே, நற்பத்தியில் தினம் தேறவே,
புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே. - சுத்
5. தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா,
பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய். - சுத்
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்
[1] பண்டிகையில்
[2] உயர்ந்த