214. செய்ய வேண்டியதைச் சீக்கிரம்

செய்யவேண்டியதைச் செய்

பல்லவி

செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய், செய், செய், செய், செய்.

சரணங்கள்

1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன்[1] கண்ட பனிபோலாம்; இது
மெய், மெய், மெய், மெய், மெய். - செய்

2. ஆவியும் கூடுவிட் டேகாமுன்,
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்,
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர், சேர், சேர், சேர், சேர். - செய்

3. அவ்வியம்[2] பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல், செல், செல், செல், செல். - செய்

4. துர்ச்சன ரோடுற வாகாமல், ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்,
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்-து
உய், உய், உய், உய், உய். - செய்


ராகம்: கமாஸ்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ஈ. பாக்கியநாதன்

[1] சூரியன்
[2] பொறாமை