179. உன்னதமாகிய என் கர்த்தரே

1. உன்னதமாகிய
என் கர்த்தரே, நீர்தாமே
மெய் விசுவாசத்தைக்
கொடுக்கிறவராமே;
இப்போதும் உம்மண்டை
நான் சேருவதற்கு
அதென்னில் மிகவும்
குறைவாயுள்ளது.

2. என் நம்பிக்கை யெல்லாம்
பலமில்லாதிருக்கும்,
என் விசுவாசத்தைப்
பேய் மிகிவுந் தடுக்கும்;
மகா தயாபரா,
சகாயம் பண்ணுமேன்
என்றிவ்விக்கட்டிலே
நான் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. நீர் என்னை உமது
கரத்தால் ஆதரித்து,
என் ஆத்துமத்துக்கு
அன்பாய்ப் பலம் அளித்து,
ஓர் கடுகத்தனை
இராதிருக்கிற
என் விசுவாசத்தை
வளர்த்தியருள.

4. ஆ, உமது பலம்
நிறைந்தபடியாக
என் பலவீனத்தில்
என்னோடிருப்பதாக,
என் நம்பிக்கை மென்மேல்
வளர்ந்து வரவே,
நீர் என்னை உம்மண்டை
இழும், என் கர்த்தரே.

5. எச் சோதனையிலும்
அடியேன் கெட்டியாக
நிலைத்து, ஜெயமாய்ப்
போர் செய்கிறதற்காக
என் விசுவாசத்தின்
தீப்பொறி மென்மேலும்
எரிவதற்கதை
நீர் ஊதிக்கொண்டிரும்.

6. ஆ, இயேசுவே, அந்நாள்
தன் நோவில் தாழ்மையோடு
விண்ணப்பம் பண்ணின
கானான் பெண்ணுக் கன்போடு
சகாயம் பண்ணினீர்;
அவ்வன்பாய் என்னையும்
என் துயரத்திலே
நீர் நோக்கியருளும்.

7. அன்புள்ள கர்த்தரே,
நீர் பேதுருவுக்காகப்
பிதாவை வேண்டின
அத்தன்மை தயவாக
இப்வேழைக்காகவும்
என் விசுவாசமே
மாளாதிருக்க. நீர்
விண்ணப்பஞ் செய்வீரே.

8. நான் விசுவாசத்தின்
மகா மகிழ்ச்சியான
பயன்களை இனிப்
பரகதியில் காண,
என் வேண்டுதலுக்கும்
என் கூக்குரலுக்கும்,
கர்த்தாவே, தேவரீர்
அன்பாய்ச் செவிகொடும்.