207. இயேசுவே, பேயின் சதிகளைப் பாரும்

1. இயேசுவே, பேயின் சதிகளைப் பாரும்,
அது இருளின் பலத்துடனே
வந்தென்னை எத்திக் கெடுப்பதை நாடும்;
வெல்ல உதவும், என் ரட்சகரே,
என்னை அச்சத்துரு எந்த வழியும்
சல்லி அரித்துப் பாழாக்கத் திரியும்.

2. இயேசுவே, பேயுடன் லோகமுங் கூடும்,
துஷ்டமாய் அல்லது தந்திரமாய்
வந்தெனதாத்துமக் கோட்டையைச் சூழும்;
வெல்ல உதவும், நீர் வல்லமையாய்
உமதடியானுக் காதரவாக
மோசம் அனைத்தையும்  நீக்குவீராக.

3. இயேசுவே, என்னிலுந் தீங்குகள் ஊரும்,
எனது வாலிபப் பாவங்களின்
நினைவால் வெட்கம் என் கண்களை மூடும்;
வெல்ல உதவும் என் ஆத்துமத்தின்
புண்கள் ஆறட்டும், நான் மிகுதியாக
நாணிச் சுத்தாங்கம் அடைந்தவனாக.

4. இயேசுவே, நெஞ்சிலும் மனத்திலேயும்
கோபம் பொறாமையும் பெருமையும்
காண்கிறவேலை அனுக்ரகஞ் செய்யும்,
வெல்ல உதவும், துணையாயிரும்;
ஸ்வாமி நான் தாழ்மையைக் கற்றும்முடைய
சிலுவையில் என் இடும்பை அறைய.

5. இயேசுவே, இச்சையை என்னில் அகற்றும்
மாமிசஞ் சாக என் ஆவி உம்மால்
பரம வாஞ்சைக் கெழுப்பப்படட்டும்
வெல்ல உதவும்; நான் தேவரீரால்
நல்ல ஆரோக்கியமாவதற்காக
உம்மை எப்போதைக்கும் நாடுவேனாக.

6. இயேசுவே, என்னிலே உமது சித்தம்
மாசறச் செய்யப்படுவதற்கே
என் முரட்டாடக் குணங்களை நித்தம்
வெல்ல உதவும், என் ஆண்டவரே;
எனக்கும் எனது இச்சைக்கும் சாவேன்,
முழுதும் உமது அடிமையாவேன்,

7. இயேசுவே, என்னை எந்நேரமுங் காரும்
உம்மை அடியேன் இழப்பதற்கே
பேய் என்னைச் சோதித்தால், ஆயுதந்தாரும்.
வெல்ல உதவும், என் ஆதரவே,
நீரே என் பொக்கிஷம், எண்ணில் தரியும்,
பேயைத் துரத்தப் பலத்தை அளியும்.

8. இயேசுவே, எத்தனாய்ச் சாத்தான் புகுந்து,
சூதாய் வெளிச்சத்தின் தூதனாக
வேஷம் எடுத்து வருகிறதுண்டு;
வெல்ல உதவும்; பலத்த கர்த்தா
சர்ப்ப வினைகள் மயக்கிக் கலைக்கும்;
நீர் என்னை விட்டால், மீட்பெங்கே கிடைக்கும்.

9. இயேசுவே, பொய்கள் பொய்யென்று காணாமல்
மெய்யென்றதாக எழும்புகிற
வேளையில் என்னை அமிழ ஒட்டாமல்,
வெல்ல உதவும், மா கபடான
ஆவிகளை நான் ஆராய்வதற்காகச்
சீக்கிரம் தெளிவுண்டாக்குவீராக.

10. இயேசுவே, நான் ஜெபம்பண்ணி, விழிக்கும்
சக்தியை ராட்சகரான நீரே
தந்து, நான் தூங்கிவிழாதபடிக்கும்
வெல்ல உதவும்; நான் மோசத்திலே,
கெஞ்சி இளைக்கையில் நீர் எனக்காக
வேண்டிக்கொன் டென்னை எழுப்புவீராக.

11. இயேசுவே, சக்தி எல்லாம் என்னை விட்டு
நான் மிரண்டோடிய மானைப்போல
திக்குத் தோன்றாமல் தவித்தால், ரட்சித்து
வெல்ல உதவும்; கிருபையாலே
சேர்ந்து, பலங்கொடுத் தெனக்குள்ளாக
ஏங்கிடும் ஆவிக் கிரங்குவீராக.

12. இயேசுவே, உமக்குத் தோத்திரமாக
சகல போரிலும் மோசத்திலும்
தேவரீரால் ஜெயங்கொள்ளுவேணாக,
வெல்ல உதவும், ரட்சித்தருளும்.
சௌரியவானே, எக்காலங்களுக்கும்
உமது நாமம் விளங்கி இருக்கும்.

13. இயேசுவே, சீயோனுடைய இக்கட்டும்.
நீடிய ஆபத்தும் ஆரிவர,
பாபேல் விழுகிற காலம் வரட்டும்,
வெல்ல உதவும், ரட்சித்தருள
துயரப் பாட்டைக் கெம்பீரப் பாட்டாக
மாற்றி, பாழானதைக் கட்டுவீராக.

14. இயேசுவே, நீர் எம் மணவாளனாக
வரும் நாள் நாங்கள் சிங்காரப்பட,
பழைய சர்ப்பத்தின் பெருமை தாழ
வெல்ல உதவும்; உம்மாலே எல்லாச்
செய்கையும் கூடும், நீர் சத்தியவானும்,
கண்ணெல்லாம் உமதுவெற்றியைக்காணும்.

J.H. Sokroder, † 1699.